ஹஸ்குவர்னா வெக்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்

பஜாஜின் கேடிஎம் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற ஹஸ்குவர்னா நிறுவனம் வெக்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் உட்பட எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இ பிலேன் என இரு மாடல்களை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வதில் மிக தீவரமாக ஈடுபட்டு வருகின்றது.

வெள்ளை மற்றும் கருப்பு நிற கலவையில் அமைந்துள்ள வெக்டோர் மின்சார ஸ்கூட்டரில் மிக நேர்த்தியான வட்ட வடிவ ஹெட்லைட் எல்இடி டி.ஆர்.எல் கொடுக்கப்பட்டு முன்புறத்தில் ட்ரெயில் லிங்கிங் சஸ்பென்ஷன் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் இணைக்கப்பட்டிருக்கலாம். தட்டையான இருக்கை கொடுக்கப்பட்டு மிக நேர்த்தியாக உள்ள இந்த கான்செப்ட் நிலையை நேரடியாக உற்பத்தி நிலைக்கு எடுத்துச் செல்ல ஹஸ்குவர்னா திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் சந்தையில் விற்பனைக்கு கிடைத்து வருகின்ற பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டரின் நுட்ப விபரங்களை நேரடியாக பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. எனவே 4KW எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 95 கிமீ வரை பயணிக்கும் திறனை கொண்டிருக்கலாம்.

Vektorr மின்சார ஸ்கூட்டர் மற்றும் E-Pilen எலக்ட்ரிக் பைக் என இரண்டும் இந்தியாவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் புனே ஆலையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் விற்பனைக்கு 2022 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது

AX1 குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வருகின்ற மைக்ரோ எஸ்யூவி மாடல் வருகை குறித்தான முதல் டீசர் படத்தை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விற்பனையில் உள்ள வென்யூ எஸ்யூவி காருக்கு கீழாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட உள்ள ஏஎக்ஸ்1 எஸ்யூவி காரின் இந்திய அறிமுகம் 2022 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. தென் கொரியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் இந்த மாடல் மிக சிறப்பான எஸ்யூவி அனுபவத்தை பட்ஜெட் விலையில் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

வெளியிடப்பட்டுள்ள டீசரில் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் படங்கள் வெளியான நிலையில், எல்இடி டி.ஆர்.எல் உடன் கூடிய வட்ட வடிவ ஹெட்லைட் உடன் வழக்கமான ஹூண்டாய் கிரில் இணைக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் இடம் பெற்றிருக்கின்ற 1.1 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஏஎம்டி ஆகியவற்றை கொண்டிருக்கும்.

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைத்து வருகின்ற மஹிந்திரா கேயூவி100, மாருதி இக்னிஸ், மற்றும் வரவிருக்கும் டாடா ஹெச்பிஎக்ஸ் எஸ்யூவி ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.