இந்தியாவில் ஹூண்டாய் 70 லட்சம் கார்கள் உற்பத்தி சாதனை

கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் சென்னை அருகில் உள்ள திருபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் இந்தியா பிரிவில் 7 மில்லியன் கார் அதாவது 70 லட்சம் கார்கள் உற்பத்தி இலக்கினை வெற்றிகரமாக கடந்துள்ளது.

18 ஆண்டுகளாக இந்தியாவில் கார்களை விற்பனை செய்து வரும் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் முதன்முறையாக சான்ட்ரோ காரின் உற்பத்தியை 1998 ஆம் ஆண்டில் தொடங்கியது. அதனை தொடர்ந்து முதல் 10 லட்சம் கார்களை 8 ஆண்டுகளை கடந்த பிறகு 2006யில் உற்பத்தி செய்தது. கடந்த 2013 ஆம் ஆண்டில் 5 மில்லியன் கார்கள் உற்பத்தி இலக்கினை கடந்தது. சராசரியாக 18 மாதங்களில் 10 லட்சம் கார்களை ஹூண்டாய் உற்பத்தி செய்கின்றது.

21ந் தேதி ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் மாடல் 70வது லட்சம் காராக உற்பத்தி செய்யப்பட்டு வெளிவந்தது. 1 கோடி கார்கள் என்ற இலக்கினை 2021 ஆம் ஆண்டின் மத்தியில் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி சுஸூகி நிறுவனத்தை தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகின்றது. மேலும் முதன்முறையாக மாதந்திர கார் விற்பனையில் 50,000 என்ற இலக்கினை அக்டோபர் 2016யில் கடந்து புதிய விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் இயான் , ஐ10 ,கிராண்ட் ஐ10 , எலைட் ஐ20 ,  ஐ20 ஏக்டிவ் ,  எக்ஸ்சென்ட் , வெர்னா , எலன்ட்ரா ,க்ரெட்டா , டூஸான் மற்றும் சான்டா ஃபீ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.